தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று தொகுதி மறு வரையறை தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமாரிடம் பாஜக நடத்திய கருப்புக் கொடி போராட்டம் குறித்தும் அண்ணாமலை பற்றியும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் வேலை பார்த்தவர். எங்களின் சக்தி குறித்து அவருக்கு தெரியும் என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த வீடியோவை பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, சித்தராமையாவை முதல்வர் நாற்காலியில் இருந்து அகற்றிவிட்டு அந்த நாற்காலியில் அமர பாடுபடும் டி.கே சிவக்குமாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் கூட்டுக்குழு கூட்டம் முடிவடைந்த பிறகு டி.கே சிவக்குமாரை சந்தித்த செய்தியாளர்கள் அண்ணாமலை பற்றி மீண்டும் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் அண்ணாமலைக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவர் தன்னுடைய கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார். பாஜகவுக்கு உண்மையாக இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டிற்கு  விசுவாசமாக இல்லை என்று கூறினார். மேலும் நேற்று தமிழக முழுவதும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கருப்புக்கொடி ஏந்திய போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.