
ராமநாதபுரத்தில் விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் கபடி வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தான் நிச்சயம் வெற்றி பெறும். அதற்கு நீங்கள் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு இலக்கை நிர்ணயம் செய்துள்ளார்.
அதாவது வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். வெல்வோம் 200 படைப்போம் வரலாறு என்று நாம் நம்முடைய பிரசாரத்தை தொடங்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலின் போது நான் இதே ராமநாதபுரம் தொகுதியில் இருந்து தான் என்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினேன். நாம் நினைத்ததை போல 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றோம்.
அதனைப் போல இன்று ராமநாதபுரத்தில் இருந்து நான் என்னுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளேன் என்று எடுத்துக் கொள்ளலாம். அனைவரும் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும். எப்படி மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் புறக்கணிக்கப்பட்டதோ அதனைப் போலவே தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை தவிர்க்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.