சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்தி திணிப்பு என்பது ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை தான். இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் என்ற முயற்சிகள நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது. வடக்கே ஒரு சில மாநிலங்களில் மட்டும் தான் இந்தி பேசப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தி தேசிய மொழியாக, அலுவல் மொழியாக மாற வேண்டும் என்பதே இந்தி பேசக்கூடியவர்களின் விருப்பமாகவும் செயல் திட்டமாகவும் உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளை அவர்கள் பிராந்திய மொழிகள் என்று சொல்கின்றனர்.

ஆனால் இந்தியும் ஒரு பிராந்திய மொழி தான் என்பதை அவர்கள் மறந்து பேசுகிறார்கள். இந்தி மொழியை பிற மொழி பேசும் மக்களின் மீது திணிப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. இந்தியாவில் உள்ள ஏதோ ஒரு மொழியோ அல்லது அயல் நாட்டு மொழியோ கூட மூன்றாவது மொழியாக படிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அது தனி நபரின் விருப்பமாகும். ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் ஒரு கொள்கை நிலைப்பாட்டை வைத்து இந்தி அல்லாது பிற மொழி பேசும் மக்களின் மீது திணித்து இந்தி பேசு எனக் கூறுவது நியாயமற்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்திக்கு அல்ல இந்தி திணிப்புக்கு ஒருபோதும் இடம் இருக்காது என அழுத்தமாக மீண்டும் சொல்லிக் கொள்கின்றேன் என திருமாவளவன் பேசியுள்ளார்.