
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம். கூட்டணி கட்சிகளுக்கு மத்தியில் பிரச்சினைகள் அடிப்படையில் விவாதங்கள் ஏற்படலாமே தவிர விரிசல்கள் ஏற்படாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதை விசிக ஏற்கிறது. திராவிடர் என்பது வேறு தமிழர் என்பது வேறு என்பதை ஆதரிப்பது தவறு. இதனை ஆர்எஸ்எஸ் மற்றும் ஆளுநர் ரவி செய்யும் நிலையில் தமிழக பாஜக ஆதரிக்கிறது.
பாஜக என்ன எதிர்பார்க்கிறதோ அதற்கு ஆதரவு கொடுப்பது போன்று சீமானின் பேச்சுக்கள் அமைகிறது. திமுக எதிர்ப்பு என்பது வேறு திராவிட எதிர்ப்பு என்பது வேறு. ஆரியம் என்பதற்கான நேர் எதிரான கருத்தியலை கொண்டது திராவிடம். இதன் அடிப்படையில் தான் திராவிட அரசியலை கையாளுகிறோம். ஆனால் தேசிய இனத்தின் அடிப்படையில் திராவிடம் மற்றும் தமிழர் என்று சீமான் வேறுபடுத்தி கூறுவது நல்லது கிடையாது. மேலும் திமுகவை எதிர்க்கிறோம் என்று சொல்லிவிட்டு ஒட்டுமொத்த திராவிட அடையாளத்தையும் எதிர்ப்பது சரியானது இல்லை என்று திருமாவளவன் கூறினார்.