மேற்குவங்க மாநில பாஜக முன்னாள் தலைவரும், முக்கிய அரசியல்வாதியுமான திலீப் கோஷ் 60 வயதில் திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை, அவர் தனது நெருங்கிய தோழியான ரிங்கு மஜும்தாரை திருமணம் செய்து கொண்டார். கல்யாணம் கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்று முடிந்தது.

இந்த திருமணம் முழுமையாக வேத மரபின் படி நடைபெற்றது. திலீப் கோஷ் பாரம்பரியமாக பஞ்சாபி மற்றும் துவதி அணிந்து, தலைக்கு ‘டோபோர்’ எனப்படும் பாரம்பரிய முக்குடன் கல்யாண மேடையில் தோன்றினார். மணப்பெண் ரிங்கு மஜும்தார், சிவப்பு பனாரசி பட்டுப் புடவையில் எழில் மிகுந்தவளாக திருமணத்தில் கலந்துகொண்டார்.

திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த திலீப் கோஷ், “எனது திருமணத்தை நலமாக வாழ வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. முதல்வர் மம்தா பானர்ஜியார் எனக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்து பூங்கொத்து மற்றும் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த திருமணம் என் அரசியல் பயணத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது என் தாயாரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் முயற்சி,” எனத் தெரிவித்தார்.

திலீப் கோஷும் ரிங்கு மஜும்தாரும் 2021ஆம் ஆண்டு எக்கோ பார்க் பகுதியில் காலை நடைபயிற்சியின்போது சந்தித்ததிலிருந்தே அவர்களது பழக்கம் தோன்றியது. அதன் பிறகு உறவு வளர்ந்து, IPL போட்டியில் கலந்து கொண்டபோது திருமண முடிவை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. ரிங்கு மஜும்தார் கூறுகையில், “திலீப் கோஷ் என் திருமண முன்மொழிவை ஏற்றுக்கொண்டதில் எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும் உள்ளது. ஆரம்பத்தில் அவர் விருப்பமின்றி இருந்தாலும், அவர் ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது,” என தெரிவித்துள்ளார். ரிங்குவுக்கு இது இரண்டாவது திருமணம்; அவருக்கு முந்தைய திருமணத்தில் ஒரு மகனும் இருக்கிறார். மேலும் இது திலீப் கோஷுக்கு முதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.