விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஹிந்தி திணிப்பு என்பது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் நடவடிக்கை. ஏற்கனவே நீண்ட காலமாக ஒரே நாடு ஒரே மொழி என்கிற அடிப்படையில் நாட்டை மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிரஞ்சு மொழி கூட கற்று கொள்கிறார்கள். ஆனால் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை கட்டாயப்படுத்தி படிக்க வைக்க முயற்சி நடக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஹிந்திக்கு அல்ல ஹிந்தி திணிப்புக்கு ஒருபோதும் இடம் கிடையாது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் போது கூட தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பு என்பது நடந்துள்ளது. நாங்கள் அப்போதும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஒருவேளை மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஹிந்தியை திணித்தால் கூட எதிர்க்கத்தான் செய்வோம் என்று கூறினார். அதாவது தமிழக அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் கல்விக்கான நிதியை விடுவிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்றும் தமிழ்நாட்டில் எப்போதுமே இரு மொழி கல்வி கொள்கை மட்டும் தான் பின்பற்றப்படும் என்றும் அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. மேலும் இது தொடர்பாக திமுகவினர் மற்றும் பாஜகவினர் இடையே கருத்து மோதல் என்பது இருக்கும் நிலையில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட ஹிந்தியை திணிக்க பார்த்தார்கள் என்றும் ஆனால் அது நடக்கவில்லை என்றும் கூறினார்.