திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் வசிப்பவர் மணி பிரபு . 30 வயதான இவர் உணவு டெலிவரி ஊழியராக வேலைசெய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர், மனைவி மற்றும் குழந்தையுடன் வண்டலுாரில் உள்ள மாமா வீட்டிற்கு சென்று, நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். பின்னர், அவரது மனைவி ஜெயலட்சுமி, ஒன்றரை வயது பெண் குழந்தையான மிகில்யா ஸ்ரீக்கு பாட்டிலில் பால் கொடுத்துள்ளார்.

அப்போது, திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, வாந்தி எடுத்து மயங்கியுள்ளது. இதனையடுத்து பெற்றோர், குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.