பாமகவை முடக்கிவிடலாம் என்று முதல்வர் நினைத்தால் அவருக்கு ஏமாற்றம் தான் பரிசாக கிடைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காடுவெட்டியில் கடந்த 1ம் தேதி நடந்த நிகழ்வில் திமுக அரசுக்கு எதிராக அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் முழக்கம் எழுப்பினார்கள். திமுகவில் தங்களுக்கு சமூக நீதி இழைக்கப்படுவதாலும் அதற்கு சிவசங்கர் போன்றவர்கள் துணை போவதாலும் மக்களிடம் இருந்த கொந்தளிப்பின் வெளிப்பாடுதான் அது. மக்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த அரசியல் சட்டம் அதிகாரம் வழங்கியிருக்கும் நிலையில் அதை மதிக்காமல் பாமக மீது வன்மமும், வெறுப்பும் கொண்டு இத்தகைய அடக்குமுறைகளை திமுக அரசு கட்டமைத்து விடுவதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

இத்தகைய அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் பாமகவை முடக்கிவிடலாம் என்று முதல்வர் நினைத்தால் அவருக்கு ஏமாற்றம் தான் பரிசாக கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பாமகவினர் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக திமுக அரசு திரும்பபெற வேண்டும். பாமகவினர் மீது வன்மம் காட்டுவதற்கு பதிலாக தெலுங்கானாவில் நடத்தப்பட்டது போன்ற தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு  நடத்தி தமிழ்நாட்டில் சமூக நீதி நிலைநாட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.