உத்திரபிரதேச மாநிலம் புலன் சாகர் மாவட்டம் ஜஹாங்க்ராபாத் என்ற பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் மோஹித். இவர் அந்த பகுதியில் இருக்கும் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இதனை அடுத்து தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக தன்னுடைய சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.  வாக்கினை செலுத்தி விட்டு வயல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்த மோகித்தை பாம்பு கடித்துள்ளது .இதனையடுத்து அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அவருடைய குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று தன்னுடைய மகனை காப்பாற்றி விடலாம் என்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்தது . இதனால் கிராமத்தினர் சிலர் மருத்துவத்தால் பாம்பு கடி சரியாகாது என்றும் ஓடும் கங்கை ஆற்றில் உடம்பை வைத்து இருந்தால் பாம்புன் விஷம் தானாக இறங்கிவிடும் என்று கூறியிருக்கிறார்கள். இதனை நம்பிய அந்த இளைஞரின் குடும்பத்தினரும் மோகித் உடலை அவந்திகா தேவி கங்கா காட் பகுதியில் இரண்டு தினங்களாக ஆற்றில் வைத்துள்ளார்கள்.

இருப்பினும் இந்த மூடநம்பிக்கை அவருடைய உயிரை காப்பாற்றவில்லை. தண்ணீரில் வைக்கப்பட்டு இருந்தபோது பாம்பின் விஷம் உடல் முழுவதும் ஏறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரண்டு நாட்களாக ஆற்று நீரில் இருந்த மோகித்தை அந்த பகுதி மக்கள் வேடிக்கை பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் பகீர் கிளப்பி வருகிறது. மூடநம்பிக்கையால் பரிதாபமாக இறந்த மோகித்திற்கு அவருடைய குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்துவிட்டு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.