விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக இருக்கிறார். இவருடைய உறவினர் ஒருவர் கடந்த 2021 ம் ஆண்டு இறந்துவிட்ட நிலையில் அவருக்கு கடந்த 2022 ம் ஆண்டு முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் 25 முதியவர்கள் கலந்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஆரோக்கியசாமி ஒரு உணவகத்தில் இருந்து சாப்பாடு வாங்கி கொடுத்தார். அதன்படி விழுப்புரம் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ஒரு உணவகத்தில் 25 சாப்பாடு ஆர்டர் செய்திருந்தார்.

அதற்காக அவர் ஒரு சாப்பாட்டுக்கு ரூ.80 வீதம் 25 சாப்பாட்டுக்கு ரூ.2000 கொடுத்தார். இதைத்தொடர்ந்து உணவகத்தின் உரிமையாளரிடம் ஒரிஜினல் பில் கேட்டபோது உரிமையாளர் ஒரு சிறிய பேப்பரில் பில் எழுதி கொடுத்துள்ளார். அதன் பின்னர் சாப்பாட்டை எடுத்து சென்று வீட்டில் உள்ள முதியவர்களுக்கு கொடுத்தார். அப்போது அதை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது உணவில் ஊறுகாய் இல்லாதது தெரியவந்தது. இதனால் ஆரோக்கியசாமி உணவகத்தின் உரிமையாளரிடம் சென்று ஊறுகாய் வைக்கவில்லை அதற்கான பணம் ரூ. 25 ஐ  எனக்கு திருப்பித் தாருங்கள் என்று கேட்டார்.

ஆனால் உணவகத்தின் உரிமையாளர் அதனை தர மறுத்த நிலையில் ஆரோக்கியசாமி விழுப்புரம் நுகர்வோர் குறைத்தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி ஊறுகாய் வைக்காததால் அதற்கான தொகையை ரூ 25 ஆரோக்கியசாமிக்கு கொடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன் பிறகு அவருக்கு ஏற்பட்ட மனவேதனைக்காக ரூபாய் ரூ.30,000ம், வழக்கிற்கு செலவு செய்ததற்காக ரூ. 5000 ம் அபராதமாக செலுத்த வேண்டும் என்று கூறினார். மேலும் தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் ரூ. 35025 அபராதத்தை செலுத்த தவறினால் மாதத்திற்கு 9% வட்டியுடன் பணத்தை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.