உத்தரப்பிரதேசம், ஆகிரா நகரில் உள்ள கிங் பார்க் அவென்யூ ஹோட்டலில் ஏப்ரல் 8 ஆம் தேதி நடந்த பரிதாபகரமான சம்பவம் ஒன்று சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது காதலியின் திருமணம் வேறு ஒருவருடன் முடிவாகியதைத் தொடர்ந்து மனவேதனைக்கு ஆளான இளைஞர், ஹோட்டல் அறையில் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஹோட்டலில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

 

இந்த சம்பவம் குறித்து ஹோட்டல் மேலாளர் அங்கித் டாண்டன் கூறியதாவது, “அந்த வாலிபரும் பெண்ணும்  ஒரே அறையில் தங்கியிருந்தனர். திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அறையிலிருந்து கத்தும் சத்தங்கள் கேட்கப்பட்டன. பிறகு அந்த இளைஞர் தன்னை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார் என்பது தெரிய வந்தது” என்றார். தீ வைக்கும் காட்சிக்கு பின், அந்த இளைஞர் தன் அறையிலிருந்து வெளியே வந்தார். அவரை அணைக்க முயன்ற காதலி கூட தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளார். உடனடியாக பணியாளர்கள் ஓடி வந்து உதவினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் ஹோட்டலுக்கு விரைந்து சென்று, தீக்காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது இருவரும் சிகிச்சையில் உள்ளனர், அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஹோட்டல் அறை தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.