
நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதியில், இரு பெரிய பாறைகளுக்கு நடுவே பெண் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண், தவறி விழுந்த செல்போனை எடுக்க முயற்சித்த போது, 500 கிலோ எடையுள்ள இரு பாறைகளின் இடுக்கில் சிக்கி 7 மணி நேரம் போராடியுள்ளார்.
அந்த பெண்ணை விடுவிக்க அவரது நண்பர் பல முயற்சிகளை செய்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பின்னர் அவசர சேவைகளை அழைத்து உதவி கோரினார். இந்த தகவல் கிடைத்ததும், மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாறைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மீட்பு குழுவினர் கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடி, S வடிவ குறுகிய இடைவெளியின் வழியாக பாறைகளின் இடுக்கில் சிக்கியிருந்த அந்த பெண்ணை வெளியே எடுத்தனர். அதிர்ஷ்டவசமாக, அந்த பெண் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதுடன், மிகப்பெரும் ஆபத்தை தாண்டி மீண்டார். இருப்பினும், அவரது செல்போன் பாறைகளின் அடியில் புதைந்துவிட்டது.