தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும் ஆவார். இவர் இன்று தன்னுடைய 48-வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு உணவு வழங்கினார். இதைத்தொடர்ந்து நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கையில் வெளியான பாலியல் புகார்கள் குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது, முதலில் பெண்களுக்கு தைரியம் வேண்டும். யாராவது பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்தாலோ தவறான எண்ணத்துடன் அணுகினாலோ அவனை செருப்பாலயே அடிக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டது போன்ற தமிழ் சினிமாவிலும் அதுபோன்று பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்றும் அது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.