அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பெண்கள் பற்றியும் சைவம் வைணவ மத கட்சியும் மிகவும் ஆபாசமாக பேசியது கடும் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது. அதாவது விலை மாதுவை (பாலியல் தொழிலாளியை) சைவம் மற்றும் வைணவத்துடன் ஒப்பிட்டு பேசிய அவர் மிகவும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தினார். இதற்கு பாஜக நாராயணன் திருப்பதி, பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது எம்பி கனிமொழியும் கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில், அமைச்சர் பொன்மொழியின் சமீபத்திய பேச்சுக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதது.

அது எந்த ஒரு காரணத்திற்காக பேசப்பட்டிருந்தாலும் இப்படி கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்று கூறினார். இதைத்தொடர்ந்து தற்போது திமுக துணை பொது செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை மேலிடம் நீக்கி உள்ளது. ஏற்கனவே இவர் ஓசி பேருந்துகள் என்று இலவச பேருந்து பயணத்தை தவறாக பேசியதால் சர்ச்சையில் சிக்கிய நிலையில் அவருடைய உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு வனத்துறைக்கு மாற்றப்பட்டார். மேலும் இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் அவருடைய பேச்சுக்கு திமுகவினரே கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.