
மலையாளத் திரையுலகில் அடுத்தடுத்து நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஓடும் காரில் நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் அதில் முன்னணி நடிகர் ஆன திலீப்புக்கு சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது. இதனால் மலையாள திரை உலகில் நடிகைகள் மீதான பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஏற்கனவே அறிக்கை தயாரித்து கேரள முதல்வரிடம் வழங்கிய நிலையில் தற்போது தான் வெளியாகியுள்ளது.
இந்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது நடிகர் சங்கம் கலைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ்கோபியிடம் பத்திரிகையாளர்கள் இன்று பாலியல் புகார்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மிகவும் கோபமாக பதிலளித்தார். அதாவது நடிகைகளின் பாலியல் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்தும். இது பற்றி ஊடகங்கள் ஏன் கேட்கிறீர்கள் என பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் கோபத்தில் பத்திரிகையாளரின் மைக்கை பிடுங்கி வீசிவிட்டார். மேலும் சுரேஷ் கோபி பத்திரிகையாளர்களிடம் மிகவும் ஆவேசமாக நடந்து கொண்டதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.