நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் பட்ஜெட் தொடர்பாக எதிர்கட்சிகள் ஆளும் கட்சியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது திமுக எம்.பி கனிமொழி நாடாளுமன்ற மக்களவையில் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பட்ஜெட்டில் கல்விக்காக நிதி ஒதுக்கப்படாதது மற்றும் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படாதது தொடர்பாக பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு மத்தியில் உள்ள பாஜக அரசு மாநில அரசுகளின் உரிமையை பறிக்க பார்க்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளில் எப்படி மத்திய அரசு தலையிட முடியும். கல்விக்காக மிகவும் குறைவான அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு, ரயில் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் ஹிந்தியை திணிக்கப் பார்க்கிறார்கள்.

அதோடு சமஸ்கிருத மொழியையும் கொண்டு ‌ வர முயற்சி நடக்கிறது. நாங்கள் சாதி என்ற கட்டமைப்பை ஒழிக்க காலம் காலமாக பாடுபட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் பாஜக அரசு ஒருவரின் சாதி என்னவென்று தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறது. ஜாதி என்பது பெருமை என்று சொல்லக் கூடிய அரசாக மோடி அரசு இருக்கிறது. ஒருவரின் ஜாதியை தெரிந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு என்ன பெருமை கிடைக்கப்போகிறது. தமிழ்நாட்டிற்கு போதிய அளவில் நிதி ஒதுக்கப்படவில்லை. மேலும் மணிமேகலையின் கையில் இருக்கும் அட்சய பாத்திரத்தை பிடுங்கிக் கொண்டு பிச்சை பாத்திரத்தை கொடுப்பது போன்று இருக்கிறது. மேலும் எங்களிடமிருந்து வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு புதிய கல்விக் கொள்கையை தேர்வு செய்தால் தான் நிதி ஒதுக்கப்படும் என்று கூறுகிறீர்கள். ஏன் உங்களை மட்டும் தான் மக்கள் தேர்ந்தெடுத்தார்களா. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லையா என்று சரமாரியாக   கேள்விகளை எழுப்பியுள்ளார்.