
சித்தூர் மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த இளம்பெண் யாஸ்மின் பானுவை அவரது பெற்றோர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த யாஸ்மின் பானு, புத்தலப்பட்டு பகுதியை சேர்ந்த சாய் தேஜை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
பெற்றோரின் ஒப்புதல் இல்லாமலேயே, இவர்கள் கடந்த பிப்ரவரி 9ம் தேதி நெல்லூரில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு பிப்ரவரி 13ம் தேதி திருப்பதி அருகே உள்ள முத்யாலா ரெட்டிபள்ளி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி முறையிட்டனர்.
இதையடுத்து, போலீசார் யாஸ்மினின் பெற்றோரை அழைத்து ஆலோசனை வழங்கியதும், இவர்கள் எதையும் சொல்லாமல் விலகினர்.
இதையடுத்து, யாஸ்மின் பானுவின் பெற்றோர் அவ்வப்போது அவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், ஏப்ரல் 13ம் தேதி தனது அப்பாவின் உடல்நிலை மோசமாக உள்ளது என்று கூறி, யாஸ்மினை சித்தூர் வரச்செய்தனர்.
சாய் தேஜ் அவரை காரில் அழைத்து வந்ததற்குப் பிறகு, யாஸ்மினின் சகோதரர் வேறு காரில் அவரை அழைத்துச் சென்றார். அதன் பிறகு யாஸ்மினின் தொலைபேசி அணைக்கப்பட்டதோடு, அவரது பெற்றோரது போனும் அணைக்கப்பட்டுவிட்டது.
உடனே சாய் தேஜ் யாஸ்மினின் வீட்டிற்கு சென்று விசாரித்த போது, “அவள் அரசு மருத்துவமனையில் இருக்கிறாள், போய்ப் பார்ப்பா” என கூறியுள்ளனர்.
மருத்துமனைக்கு சென்ற சாய் தேஜ், யாஸ்மின் குறித்த தகவல்களைக் கேட்டபோது முதலில் யாரும் தெரியவில்லை என கூறியுள்ளனர். பின்னர் அவரது புகைப்படத்தை காட்டியதும், தூக்கிட்டு இறந்தவராக யாஸ்மின் பானுவை அடையாளம் காண்பிக்கப்பட்டது.
உடல் பிணவறையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சாய் தேஜ், தனது மனைவியின் மரணத்திற்கு யாஸ்மினின் பெற்றோர்களே காரணம் எனக் கூறி போலீசில் புகார் செய்துள்ளார்.
சித்தூர் நகர காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, யாஸ்மினின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.