
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் பகுதியில் மூவேந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 30 வயது ஆகும் நிலையில் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி சுஜாதா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் சுஜாதா மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் இருந்து தன்னுடைய மனைவிக்கு உணவு எடுத்து வருவதற்காக பைக்கில் மூவேந்தன் கிளம்பினார்.
இவர் கள்ளிக்குடி என்ற பகுதியில் வளைவில் திரும்பும்போது திடீரென தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். மருத்துவமனையில் அவருடைய மனைவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதே மருத்துவமனையில் பிணவறையில் மூவேந்தன் சடலம் இருக்கிறது. மேலும் கணவன் இறந்த செய்தியை அந்த மனைவியிடம் சொல்ல முடியாமல் உறவினர்கள் தீராத துயரில் தவிக்கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.