தமிழ்நாடு முழுவதும் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களை குறிவைத்து, மயக்க மருந்து கலந்து நகை பறிக்கும் குற்றங்களில் ஈடுபட்டிருந்த ரகசிய காதல் ஜோடியை போலீசார் சிக்கவைத்துள்ளனர். சென்னை, வேலூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் அண்மையில் நடைபெற்ற தொடர்ந்த நகை திருட்டு சம்பவங்களால் அதிர்ச்சி நிலவியது. பாதிக்கப்பட்ட பெண்கள் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, விசாரணையில் ஈடுபட்ட போலீசார், பேருந்துகளில் கைவரிசை காட்டும் கும்பலை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிரமாக நடவடிக்கை எடுத்தனர்.

அந்தப் பணியின் போது, நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராணி என்ற 54 வயது பெண் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டார். விசாரணையில் அவர் மட்டும் இல்லாமல், பழனியைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்ற நபரும்  உடந்தையாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் கடந்த 15 ஆண்டுகளாக ஒன்றாகவே வாழ்ந்து, கூட்டாக திருட்டுத் தொழில் செய்து வந்துள்ளனர். இவர் இருவரும் குறிப்பாக, வயதான பெண்கள் தனியாக பயணம் செய்யும் போது, அருகில் அமர்ந்து கோவில் பிரசாதம் என கூறி மயக்க மருந்து கலந்து இனிப்புகளை கொடுத்து மயக்கத்தில் ஆழ்த்தி நகைகளை திருடி வந்துள்ளனர்.

பேருந்தில் பெண்கள் வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவுப் பாட்டில்கள் அல்லது பார்சல்கள் திறக்கும் தருணத்தில் அதில் மயக்க மருந்து தூவி நகைகளை அபேஸ் செய்ததையும் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். வெள்ளரிக்காய், மாங்காய் போன்றவற்றிலும் மயக்க மருந்து தெளித்து பெண்களை மயக்கமாக்கி நகைகளை எடுத்து தப்பியதையும் தெரிவித்துள்ளனர். திருடிய நகைகளை உடனடியாக தங்க நாணயங்களாக மாற்றி, புதிய நகைகள் வாங்கி, அதை மீண்டும் விற்று பணத்தை கல்லா கட்டவும் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தற்போது ராணி மற்றும் பரமேஸ்வரனை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 10 சவரன் தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங்களை பறிமுதல் செய்துள்ளனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 15 ஆண்டுகளாக நகைகளை திருடி, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த இந்த ரகசிய காதல் ஜோடியை பிடித்ததற்காக, தனிப்படை போலீசாருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், பேருந்து பயணங்களில் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.