
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இதன் காரணமாக கோவிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த கோவிலில் தினந்தோறும் காலை 6 மணிக்கு தங்க தேர் புறப்பாடு நடைபெறும்.
இந்நிலையில் தற்போது திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசினால் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கோவிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கோவிலின் வடக்கு மற்றும் கிழக்கு பிரகார தரைதளப் பணிகள் வருகின்ற கந்தசஷ்டி திருவிழாவிற்கு முன்பாக முடிக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக வருகின்ற ஜூலை 17ஆம் தேதி முதல் தங்கரத புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். மேலும் பணிகள் முடிவடைந்த பிறகு வழக்கம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.