
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே ஏரகுடி என்ற கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் முதலில் துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்த பிறகு விவசாயம் செய்ய ஆரம்பித்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் பல திட்டங்களால் அவர் ஈர்க்கப்பட்டுள்ளார். உடனடியாக அந்த திட்டங்களின் மூலம் பயன்பெற்று நல்ல லாபம் ஈட்டியுள்ளார். இதனால் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் மீது அதிகமான பற்று ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பிரதமர் மோடிக்கு கோவில் கட்ட முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் கோவில் கட்ட ஆரம்பித்த நிலையில் 6 மாதங்களில் அந்தப் பணியை முடித்தார். அவர் பிரதமர் மோடியின் சிலையை வடித்த நிலையில் கோவில் கட்டுவதற்காக சுமார் ரூ.1.25 லட்சம் செலவு செய்துள்ளார். அவர் தினந்தோறும் பிரதமர் மோடிக்கு பூஜைகள் செய்வதோடு மற்றும் பிரசாதங்கள் படைத்து வழிபாடு செய்து வருகிறார். இந்த கோவிலில் பிரதமர் மோடியின் சிலையுடன் ஜெயலலிதா, எம்ஜிஆர், காமராஜர், அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களின் உருவப்படங்களையும் வைத்துள்ளார். மேலும் தனக்கு விவசாயத்தில் அதிக லாபம் கிடைத்தால் பிரதமர் மோடிக்கு பூஜை செய்வது என்று வேண்டுவதோடு தன்னுடைய வேண்டுதல் நிறைவேறினால் அவருக்கு சிறப்பு பூஜை செய்வதாகவும், 3-வது முறையாக அவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.