பிரதமர் நரேந்திர மோடி நேற்று பாம்பன் பாலத்தை திறந்து வைப்பதற்காக தமிழகம் வந்த நிலையில் அதன்பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடியுடன் ஒரே மேடையில் நயினார் நாகேந்திரன் அமர்ந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்ட போதிலும் அவர் கீழே அமர்ந்திருந்ததால் புதிய பாஜக தலைவர் குறித்து பல்வேறு வியூகங்கள் எழுந்தது. இதற்கு நேற்று செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை விளக்கம் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,

ராமேஸ்வரத்தில் நடந்தது அரசு நிகழ்ச்சி என்பதால் நான் மேடைக்கு பின்புறம் கோவிலில் இருந்தேன். பிரதமர் மோடி அவர்கள் அரசு நிகழ்ச்சி இல்லாமல் எங்கெல்லாம் இருந்தாரோ அங்கெல்லாம் நானும் அவருடன் தான் இருந்தேன். மக்கள் வரிப்பணத்தில் அரசு நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் அந்த இடத்தில் எனக்கு வேலை இல்லை. அதனால்தான் பாஜக பிரதிநிதிகளாக மத்திய மந்திரி எல். முருகன், அந்த மாவட்டத்தின் எம்எல்ஏ, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.

மேலும் அந்த இடத்தில் நான் அமர்ந்திருப்பது தவறு என்று கூறினார். முன்னதாக அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் ஒரே மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்ததால் அவரைத்தான் தலைவராக தலைமை தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அண்ணாமலை அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.