
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி சர்வதேச ஊழல் தடுப்பு மையம் மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பின் சார்பாக சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது இந்த பட்டங்கள் அனைத்தும் போலியானவை என புகார் எழுந்ததை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக அளித்த புகாரின் அடிப்படையில் பட்டங்களை வழங்கிய ஹரிஷ், மற்றும் அவருடைய கூட்டாளி மகாராஜன் என்ற குட்டி ராஜா ஆகியோரை கோட்டூர்புரம் போலீசார் தேடி வந்த நிலையில் ஆம்பூர் அருகே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மோசடி மன்னன் ஹரிஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹரிஷ் கல்லூரி காலங்களில் திறமையான பேச்சாளராக இருந்து வந்துள்ளார். ஒரே நேரத்தில் 108 தலைப்புகளில் மாற்றி மாற்றி பேசக்கூடிய பேச்சாற்றல் பெற்றுள்ளார். இதற்காக இவருக்கு தனியார் நிறுவனம் ஒன்று சிறந்த பேச்சாளருக்கான பட்டத்தை வழங்கி உள்ளது.
இந்த நிகழ்வு தான் இவருக்கு டாக்டர் பட்ட மோசடியை அரங்கேற்ற உந்து சக்தியாக அமைந்துள்ளது. மூன்று லட்சம் வசூல் செய்து இரண்டு லட்சம் செலவு செய்து நிகழ்ச்சி நடத்தியதாகவும், ஓய்வு பெற்ற நீதிபதி கையெழுத்தை போலியாக பயன்படுத்தி அனுமதி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார் ஹரிஷ்.