பிரம்மா குமாரிகள் அமைப்பின் தலைவராக இருந்த ராஜயோகினி தாதி ரத்தன் மோகினி, கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 1:20 மணியளவில் அகமதாபாத்தில் காலமானார். 101வது வயதில் தனது மரணமடைந்த தாதி ரத்தன், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் மார்ச் 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ராஜஸ்தானில் உள்ள ஆபுரோட்டின் சாந்திவன் பிரம்மா குமாரிகள் தலைமையகத்தில் வைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுகிறது. இறுதி சடங்குகள் ஏப்ரல் 10 காலை 10 மணிக்கு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு முதல் நிர்வாக தலைவியாக இருந்த தாதி ரத்தன் மோகினி, தனது வாழ்க்கையை முழுமையாக ஆன்மீக சேவைக்கும், மனித குல நல்வாழ்வுக்கும் அர்ப்பணித்தவர். பிரம்மா குமாரிகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், “அமரர் தாதி ரத்தன் மோகினி அக்காவின் பரிசுத்தமான ஆற்றல், அவரது அன்பும், எளிமையும் மற்றும் உயர்ந்த ஆன்மீக பார்வையும் எங்களது இதயங்களில் என்றும் உயிருடன் தொடரும்” என உருக்கமான இரங்கல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாதி ரத்தன் தனது சேவையின் ஆரம்பகாலத்தில் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஆன்மீக ஒளியை பரப்பியவர். அவர் தனது 101 ஆண்டுகள் வாழ்க்கையில் தனித்துவமான ஆன்மீக நடைமுறைகளை ஏற்படுத்தி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு பாதை காட்டியவர். அவரது மரணம் ஆன்மீக உலகிற்கு மறக்க முடியாத இழப்பாக கருதப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலிருந்து பிரம்மா குமாரிகள் உறுப்பினர்கள் மற்றும் ஆன்மீக நேசிகள், தாதியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.