
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் சமீபத்தில் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அவருடைய இரண்டாவது மகன் கவினும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருது பெற்றார். அந்த நிகழ்ச்சியின் போது கவின் தான் தமிழ் பாடத்தை எடுக்கவில்லை எனவும் பிரஞ்சு மொழிதான் படித்து வருவதாகவும் கூறினார். சென்னையில் உள்ள ஐசிஎஸ்சி பள்ளியில் கவின் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் இது பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் என் மகன் 6-ம் வகுப்பு வரை தமிழ் பாடம் தான் படித்தான். பின்னர் 7-ம் வகுப்பில் பிரெஞ்சு மொழி எடுப்பதாக என்னிடம் கூறினான். ஆனால் நான் பிரெஞ்சு மொழி கடினமாக இருக்கும் வேண்டுமென்றால் ட்ரை பண்ணி பாரு என்று கூறினேன். என் மகன் பிரஞ்சு மொழி எடுத்த நிலையில் பின்னர் அது கடினமாக இருக்கிறது என்று கூறி தற்போது எட்டாம் வகுப்பில் தமிழ் பாடம் எடுத்து படித்து வருகிறார். என்னுடைய மகன் தமிழ் தான் படித்து வருகிறான். எதற்காக அப்படி சொன்னான் என்பது தெரியவில்லை. ஒருவேளை திடீரென்று மைக்கை நீட்டி கேட்டதால் மாற்றி சொல்லிவிட்டான் என்று நினைக்கிறேன். நீங்க கவலைப்பட வேண்டாம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மகன் தமிழ் தான் படித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.