
சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி வேலூர் புது தெருவில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் கிரி 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்துவிட்டு மணியனூரில் இருக்கும் அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கடந்த 7- ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்து மர்மமான முறையில் கிரி உயிரிழந்தார். இதனால் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இருக்கும் மயானத்தில் குடும்பத்தினரும், உறவினர்களும் மாணவர்களின் உடலை அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் போதை ஊசி செலுத்தியதால் மாணவர் உயிரிழந்து விட்டதாக அன்னதானப்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் அசோகனுக்கு புகார் வந்ததால், போலீசார் மாணவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த முடிவு எடுத்தனர். அதன்படி தாசில்தார் செல்லதுரை தலைமையில் போலீஸ் உதவி கமிஷனர்கள் ஆனந்தி, அசோகன் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி ஆகியோர் முன்னிலையில் கிரியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
இதனையடுத்து அரசு டாக்டர்கள் மாணவரின் உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, போதை ஊசி செலுத்தியதால் மாணவர் இறந்துவிட்டதாக புகார் வந்தது. இதனால் பிரேத பரிசோதனை செய்து உடல் பாகங்களை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளோம். அந்த ஆய்வு அறிக்கை வந்த பிறகுதான் மாணவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.