பீகார் மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் 5 பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுந்த நிலையில் தற்போது 6-வது முறையாக மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் நிதீஷ்குமார் தலைமையிலான ஆளும் ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. அதாவது கனமழையின் காரணமாக தாக்கூர் கன்ச் நகரில் பண்ட் ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயர்ந்தது. இதனால் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபானி பகுதியில் கட்டப்பட்ட 75 மீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்தது. இதற்கு முன்பு கிஷன் கஞ்ச் நகரில் கடந்த 2011 ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஒரு பாலமும், அதற்கு முன்பு பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்னதாகவும் இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் படேதா-கராலி கிராமங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட ஒரு சிறிய பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. மேலும் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுவது ஆளும் கட்சி மீது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.