திருவாரூர் அருகே சொத்து தகராறு காரணமாக மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட நபர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சன்னாநல்லூர் அருகே காவாளி கிராமத்தில் பாப்பம்மாள்(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இந்த நிலையில் பாப்பம்மாள் சித்திலமடைந்த தனது வீட்டை இடித்து புதிதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவர் மூதாட்டி வீடு கட்டி வரும் நிலத்தை தனது பூர்வீக சொத்து எனக் கூறி தகராறு செய்துள்ளார். இது குறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் மூதாட்டி அந்த வீட்டை கட்டி முடித்த பிறகு பத்துக்கும் மேற்பட்டோர் மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் சுத்தியல் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அந்த வீட்டை அடித்து நொறுக்கி ரகளை செய்தனர்.

மேலும் அவர்கள் மூதாட்டியின் மகள்கள் மற்றும் பேரன்களை தாக்கியுள்ளனர். காயமடைந்த நபர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.