
செங்கல்பட்டு அருகே போலி நகைகளை விற்று மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த ருக்மணி என்பவர் அதே பகுதியில் ஜெராக்ஸ் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த நபர்கள் சிலர் செல்போன் உதிரி பாகங்களை கடந்த சில மாதங்களாக வாங்கி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த நபர்கள் தங்களுக்கு புதையலில் தங்க நகைகள் கிடைத்துள்ளதாகவும் பணக்கஷ்டம் காரணமாக அவற்றை குறைந்த விலைக்கு விற்க இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதை நம்பிய ருக்மணி அந்த நபர்களிடம் சில லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நகைகள் போலியானவை என்று அறிந்த அவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது சம்பந்தப்பட்ட அந்த கும்பல் செங்கல்பட்டை அடுத்த ஆம்பூர் பகுதியில் பிளாஸ்டிக் பொருள் அழிப்பு தொழில் செய்து வருவது போல வீடு எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது. தற்போது இது தொடர்பாக அந்த கும்பலை சேர்ந்த கீதா என்ற பெண்ணை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.