திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லிகவுண்டம்பாளையம் குறிச்சி பகுதியில் ஆனந்தன்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்துள்ளார். அதற்கு சிறுமியும் சிறுமியின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து ஆனந்தன் சிறுமிக்கு தொந்தரவு அளித்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி நல்லி கவுண்டம்பாளையம் பகுதியில் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது. புத்தாண்டை கொண்டாடிவிட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு சிறுமி தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது ஆனந்தன் தன்னை காதலிக்குமாறு சிறுமியை வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த ஆனந்தன் கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆனந்தனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு ஆனந்தன் குணமானார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கினை விசாரித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஆனந்தனுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.