புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் இரு ஐடி ஊழியர்கள் பலியான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைதான சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்த விபத்து வழக்கில் டிரைவரை கட்டாயப்படுத்தி காவல் நிலையத்தில் சரணடைய வைத்த குற்றத்திற்காக சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சிறுவன் சம்பவ நாளில் 2 பார்களில் இருந்து குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் கண்டறியப்பட்ட நிலையில் அவருடைய ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

ஆனால் அந்த ரத்த மாதிரிகளை குப்பையில் வீசிவிட்டு போலியான மருத்துவ சான்று கொடுத்தது விசாரணையில் அம்பலமான நிலையில் சசூன் மருத்துவமனை மருத்துவர்களான அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரிஹர்ணர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றி கொடுத்தது அவருடைய தாயார் ஷிவானி அகர்வால் என்பது தற்போது  தெரியவந்துள்ளது. அதாவது ஷிவானி தன் மகனுக்கு பதிலாக தன்னுடைய ரத்த மாதிரியை கொடுத்து தன்மகன் மது அருந்தவில்லை என நிரூபித்துள்ளார். இதனால் தற்போது ஷிவானியை கைது செய்ய காவல்துறையினர் வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் கார் விபத்தில் இரு ஐடி ஊழியர்கள் பலியான நிலையில் சிறுவனைக் காப்பாற்ற மொத்த குடும்பமும் சேர்ந்து பண பலத்தை காண்பித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.