உலகம் முழுவதும் வரும் புயல்களுக்கு சர்வதேச வானிலை ஆய்வு மையம் பெயர் வைக்கிறது. அந்தப் பெயர்களை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள நாடுகளின் வானிலை அமைப்பு பரிந்துரைக்கும். அதுபோல இந்திய பெருங்கடல், வங்க கடல், அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயரை இந்திய வானிலை ஆய்வு மையம் பரிந்துரைக்கும். அதற்கு இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளை கொண்ட WMO/ESCAP குழு பெயர் தேர்வு செய்து அளிக்கும்.

இந்திய வானிலை மையம் பரிந்துரைக்கும் பெயர்களை இப்பகுதியில் உருவாகும் புயல்களுக்கு சர்வதேச வானிலை ஆய்வு மையம் சூட்டும். அப்போது இதற்கென கடைபிடிக்கப்படும் வழிகாட்டுதல்களை பின்பற்றி மத நம்பிக்கை, கலாச்சாரம், பாலினம் மற்றும் அரசியலுக்கு நடுநிலையாகவும் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாத படியும் எளிதில் உச்சரிக்கும் வகையில் அதிகபட்சம் எட்டு எழுத்து கொண்ட வார்த்தையாகவும் தேர்வு செய்து சூட்டும்.

ஒருமுறை புயலுக்கு வைத்த பெயர் திருப்பி வேறு ஒரு புயலுக்கு வைக்கப்படும் நடைமுறை இல்லை. அத்துடன் அந்த வார்த்தையை சர்வதேச வானிலை மையம் நீக்கிவிடும். கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்திய பெருங்கடல், வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் அடுத்து உருவாக உள்ள புயல்களுக்கான 169 பெயர்கள் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டு விட்டன. அதிலிருந்தே இனி உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கப்படும்.