கேரள மாநிலம் கோதாஞ்சேரியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தேர்வு மையத்தில் உள்ள ஒரு மாணவன் மது போதையில் தேர்வு எழுத வந்துள்ளார். தேர்வு அறையில் அவரது நடத்தைத் தொடர்பாக சந்தேகமடைந்த கண்காணிப்பு ஆசிரியர், மாணவனை நெருங்கிச் சென்றபோது மதுவின் நாற்றம் வீசியதாகவும், பின்னர் அவரது பேக்கை சோதனை செய்ததில் மதுபாட்டி மற்றும் ரூ.10,000 ரொக்கம் இருந்ததும் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையில், மாணவன் தேர்வுக்கு பின் நண்பர்களுடன் கொண்டாட மது வாங்கியதாகவும், பாட்டியின் மோதிரத்தை திருடி விற்று அந்த பணத்தை பெற்றதாகவும் கூறியுள்ளார். உடனடியாக மாணவனை தேர்வு அறையிலிருந்து வெளியேற்றிய பள்ளி நிர்வாகம், அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்தது. சம்பவம் தொடர்பாக ஆரன்முளா போலீசார் விசாரணை மேற்கொண்டு, மது வழங்கியவர்கள் யார், என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், மாணவனுடன் தொடர்புடைய நான்கு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.