
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா திரைப்படத்தில் நடித்த நிலையில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்ததால் அடுத்ததாக புஷ்பா 2 படத்தில் நடித்தார். இந்த படம் இதுவரை 1508 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்தவர் விவகாரம் தெலுங்கு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தை பார்க்க காதலன் அழைத்து செல்லாததால் காதலி தற்கொலை முயற்சி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் ஒரு பெண்ணும் ஆணும் காதலித்து வந்துள்ளனர். அந்த காதலி தன் காதலனிடம் புஷ்பா 2 படத்தை பார்க்க அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் படத்தை பார்க்க வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வேதனையில் அந்த காதலி 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காதலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.