
சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொட்டம்பட்டி பகுதியில் வசிப்பவர் பூபாலன். 22 வயதான இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அந்த பகுதியை சேர்ந்த உறவினர் மகளான மேகலா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் மன வேதனை அடைந்த பூபாலன் வீட்டில் இருந்த பூச்சி மருந்து எடுத்து குடித்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கணவனோடு ஆஸ்பத்திரியில் இருந்த மேகலா திடீரென்று மாயமான நிலையில் உறவினர்கள் அவரை பல இடங்களிலும் தேடி வந்துள்ளனர் . அப்போது அதே மருத்துவமனையில் உள்ள மரத்தில் மேகலா தன்னுடைய துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து சென்ற போலீசார் மேகலாவின் உடலை மீட்டு பரிசோதனை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார்கள். கணவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் உறவினர்களிடம் கூறாமல் மேகலாவிடம் கூறியுள்ளனர். இதனால் கணவர் இறந்து விடுவார் என்ற அச்சத்தில் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்றும், அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேகலாவின் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கியதால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவியது.