
தமிழகத்தில் பெஞ்சல் புயல் உருவாகியுள்ள நிலையில் சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்கு பிறகு காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்க இருக்கிறது. இதனால் பலத்த சூறாவளி காற்றுடன் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புயல் காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் புயல் எச்சரிக்கையாக பொதுமக்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து தற்போது பார்ப்போம். அதன்படி, குறுகிய காலத்தில் பிரசவ தேதி இருந்தால் அந்த தாய்மார்கள் முன்கூட்டியே மருத்துவமனையில் சென்று அட்மிட் ஆக வேண்டும்.
அதன்பிறகு தகுந்த மருந்து மாத்திரைகள், பாம்பு கடி விஷமுறிவு ஊசி, ப்ளீச்சிங் பவுடர் போன்றவற்றை உரிய முறையில் இருப்பு வைத்திருக்க வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் சுகாதார நிலையங்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ நிவாரண முகாம்களை தேவைப்படும்படி அமைத்துக் கொள்ள வேண்டும். தற்போது நடைபெற்று வரும் மழைக்கால சிறப்பு முகாம்களை தேவைக்கேற்ப அதிகப்படுத்த வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களோடு பொதுமக்கள் மருத்துவ சேவைகளை முறையாக கடைபிடிப்பதோடு 108 நம்பருக்கு போன் செய்து அவசரகால உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் மேற்கண்ட அறிவிப்பை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.