
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய தக்கேப்பள்ளியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த 2ஆம் தேதி கார்த்திக் உடல் எரிந்த நிலையில் கொட்டகையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. புவனேஸ்வரி என்ற பெண்ணும், அவரது காதலர் தினேஷ்குமாரும் இணைந்து கார்த்திக்கை கொலை செய்துள்ளனர். தினேஷ்குமார் பெங்களூரில் இருக்கும் தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த ஒரு ஆண்டுகளாக புவனேஸ்வரியும் தினேஷ்குமாரும் காதலித்து வந்தனர். அதற்கு முன்பாகவே கார்த்திக் புவனேஸ்வரியுடன் பழகியுள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அதனை மறைத்து கார்த்திக் புவனேஸ்வரியுடன் பழகியுள்ளார். இதனை அறிந்த புவனேஸ்வரி கார்த்திக்கிடம் பேசுவதை நிறுத்திவிட்டு தினேஷ்குமாரை காதலித்து வந்தார்.
இதனால் கோபமடைந்த கார்த்திக் அடிக்கடி புவனேஸ்வரியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுபற்றி புவனேஸ்வரி தனது காதலனிடம் கூறியுள்ளார். இதனால் இருவரும் கார்த்திக்கை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர். அதன்படி புவனேஸ்வரி கார்த்திக்கை தனியாக வரவழைத்து காதலனுடன் சேர்ந்து அடித்து உதைத்துள்ளார். பின்னர் கார்த்திக்கின் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்தது உறுதியானது. அதனால் புவனேஸ்வரியையும், தினேஷ்குமாரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.