சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், மின்சார ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த வடமாநில இளைஞர், பயணச்சீட்டு சரிபார்ப்பின் போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் கடற்கரை நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு வந்து நின்றபோது, ரயில்வே பெண் அதிகாரி பயணச்சீட்டு சோதனை செய்தார். அப்போது, முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த இளைஞர், 2ம் வகுப்பு பயணச்சீட்டை காட்டியதால், அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர், பெண் அதிகாரியை தள்ளிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அங்கிருந்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக இளைஞரை மடக்கிப் பிடித்தனர். இதனால் அவர்கள் நடைமேடையில் கட்டிப்பிடித்து உருண்டு சண்டையிட்டனர். இதுகுறித்து அறிந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து, இளைஞரை கைது செய்து காவல் நிலையத்திற்குக் அழைத்து சென்றனர். விசாரணையின் போது, இளைஞர் தனது தவறை ஒப்புக்கொண்டு, அபராத தொகையை செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

இந்த பரபரப்பான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, ரயில்வே அதிகாரிகளின் நடவடிக்கையை சிலர் பாராட்டினார்கள், மேலும் சிலர் இளைஞரின் மீதான நடவடிக்கை மிக கடுமையானது என விமர்சனம் செய்தனர். பெண் அதிகாரியுடன் நடந்த இந்த தகராறு, ரயில்வே பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், ரயில்வே நிர்வாகம் அனைத்து பயணிகளும் முறையான பயணச்சீட்டுடன் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.