கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மலிவான அரசியல் செய்வதாக விமர்சித்தார்.

வங்கதேசத்தில் நிகழ்ந்தது போன்று மேற்கு வங்கத்திலும் நிகழ வேண்டும் என்று அவர்கள் நினைப்பதாகவும் மம்தா குற்றம் சாட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் குற்றத்தில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டதாகவும் காவல் ஆணையம் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் உடனடியாக தான் நேரில் சென்று பேசியதாகவும் அவர் கூறினார்.

அதன்பின் குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என பெண்ணின் பெற்றோர் தன்னிடம் கூறியதாகவும் அந்த விஷயத்தில் தற்போது உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எந்த ஒரு விசாரணைக்கும் அவகாசம் கொடுக்க வேண்டும் என கூறிய அவர் முறையான விசாரணையின்றி யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் சிபிஐக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.