கொல்கத்தாவில் கடந்த வாரம் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியின் முதுகலை பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்தப் பெண் இரவில் வேலையில் இருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதில் சஞ்சய் ராயை கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்துப்பட்டு வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தங்களது கண்டனத்தையும், ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜஸ்பிரித் பும்ரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, பெண்களின் பாதையை மாற்ற சொல்லாதீர்கள், நிலப்பரப்பை மாற்றுங்கள். ஒவ்வொரு பெண்களும் சிறப்பாக இருக்க தகுதியானவர்கள் என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. பெண்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்த சமுதாயத்தின் பார்வைகள் இன்னும் மாறவில்லை என்று கூறினார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

இத்தனை ஆண்டுகளில் எதுவும் மாறவில்லை, காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது. குற்றவாளிகள் ஒவ்வொருவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் பதிவிட்டிருந்தார்.