திருநெல்வேலியில் ஹைகிரவுண்ட் ரோட்டில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் முன்பாக ஏராளமான மாணவர்கள் பேருந்துக்காக காத்து நின்றனர். மாணவர்கள் அனைவரும் மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்காக காத்து நின்ற நிலையில் அப்போது பேருந்து வந்தது. அந்த பேருந்தின் முன்பக்க கதவு மூடப்பட்டிருந்த நிலையில் இருந்ததால் அனைவரும் பின்பக்கம் வழியாக ஏறினார்கள். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் பேருந்தில் ஏறியதாக கூறப்படும் நிலையில் திடீரென அவர்கள் அடுத்தடுத்து  கீழே விழுந்துவிட்டனர்.

ஆனால் மாணவர்கள் கீழே விழுந்த போதிலும் ஓட்டுநர் பேருந்தை லேசாக நகர்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக யாரும் டயருக்குள் சிக்கவில்லை. மேலும் இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மாணவர்கள் கீழே விழுந்த போதிலும் ஓட்டுநர் பேருந்தை  எடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.