சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் சுந்தர் என்ற மாணவர் படித்து வந்துள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென சுந்தரை வழிமறித்து கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு காயமடைந்த சுந்தரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரிய மேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த தப்பி ஓடிய மாணவர்களை தேடி வந்த நிலையில் 5 பேரை  கைது செய்துள்ளனர். இதற்கிடையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுந்தர் இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.

மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாநில கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரிகளில்  போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டதோடு ரயில்வே நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு ரூட்டுத்தல விவகாரத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இனி ரயில்களில் மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டால் 10 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.