நடிகர் விக்ரம் நடித்த வீரதீர சூரன் படம் வெளியாக தாமதமானதால் ராமநாதபுரத்தில் உள்ள தியேட்டருக்கு வெளியே இரண்டு கோசடிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஒருவர் மண்டை உடைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி உள்ளது. மேலும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பக்கத்தில் இருக்கக்கூடிய திரையரங்கில் இன்று காலை 10:30 மணி அளவில் விக்ரம் நடித்த வீரதீரசூரன் படம் வெளியாக வேண்டிய நிலையில் நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவால் படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ராமநாதபுரம் பேராவூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும்,  அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே மேல தாளத்தோடு நடனமாடும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இரண்டு கோஷ்டிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவருக்கு மண்டை உடைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து போலீசார் வந்து தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்கள். மேலும் இது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.