ராஜஸ்தானில் கோட்புட்லி-பேஹ்ரோர் மாவட்டத்திலுள்ள பாவ்டா நகரத்தில், ஏப்ரல் 18ஆம் தேதி மதியம் 1.20 மணியளவில், 20 வயதான திருமணமான பெண் ஒருவர் தனது வீட்டிலிருந்து வெளியில் இழுத்து கடத்தப்பட்ட சம்பவம், மாநிலமெங்கும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண், தனது கணவருடன் வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில், முகத்தை துணியால் மூடிய 6 பேர் கொண்ட குழுவினர், எஸ்.யூ.வி வாகனத்தில் வந்து பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் முழுவதும் அருகிலுள்ள சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

பெண் தனது குடும்பத்தை மீறி திருமணம் செய்திருந்ததால், இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே முன்பிருந்த மோதல் காரணமாகவே இந்த கடத்தல் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக கணவர் பெண்ணின் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்ததால் கோபத்தில் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து அவரை தாக்கியதோடு, அந்த பெண்ணின் கைகளை பிடித்து வாகனத்தில் இழுத்து ஏற்றி கொண்டு சென்றனர் என தெரிவித்தார். சம்பவம் நடந்ததும், கணவரும், அருகிலுள்ளவர்களும் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இந்த விவகாரத்தில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிராக்புரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக காவல்துறையினர் வீடியோ காட்சிகள், சிசிடிவி படங்கள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். “பெண்ணை மீட்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்” என போலீசார் உறுதி அளித்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.