
சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் அசோக் குமார் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி தவமணி (38) என்ற மனைவியும் வித்ய தாரணி (13), அருள்குமாரி (12) ஆகிய இரு மகள்களும் 5 வயதில் அருள் பிரகாஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் அசோக் குமார் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் நிலையில் அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தன் மனைவியுடன் தகராறு செய்வதோடு குடும்ப செலவுகளுக்கும் பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் அவர் மனைவி கூலி வேலை செய்து பிள்ளைகளை காப்பாற்றினார்.
இந்நிலையில் இன்று காலை மது போதையில் வந்த அசோக் குமார் மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர் குழந்தைகள் மூவரையும் ஒரு அரிவாளை எடுத்து அவர் சரமாரியாக வெட்ட அதை தடுக்க வந்த தவமணியையும் கொடூரமாக வெட்டினார். குழந்தைகள் அப்பா வேண்டாம் விட்ருங்க என்று கதறி அழுத போதிலும் மனம் இறங்காமல் அவர் அரிவாளால் கொடூரமாக வெட்டினார். இது தொடர்பாக தவமணி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது குழந்தைகள் வித்ய தாரணி மற்றும் அருள் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.
அதன் பிறகு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தவமணி மற்றும் அருள் குமாரி ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள நிலையில் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அசோக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் தன் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தான் அனைவரையும் வெட்டியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.