
கோவை மாவட்டம் பெரிய கடை வீதிக்கு அருகே பேருந்தில் பயணம் மேற்கொண்ட சரஸ்வதி என்பவர் அணிந்திருந்த 6 சவரன் நகை காணாமல் போனது. இதுபோன்று போத்தனூரில் ஒரு பெண்ணின் 11,000 ரூபாய் ரொக்க பணமும் திருடு போனது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுபோன்று தொடர் புகார் எழுவதால் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். பெண்களை குறி வைத்து திருட்டு சம்பவங்கள் நடப்பதால், இதில் பெண் ஒருவர் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். இந்நிலையில் பேருந்துகளில் செல்லும் பயணிகளை நோட்டமிட்ட காவல்துறையினர் முத்தப்பன்-சாந்தி தம்பதியர் மீது சந்தேகம் அடைந்தனர்.
இதுகுறித்து அவர்களிடம் விசாரித்ததில் பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து நகை, பணம் திருடுவது தெரிய வந்தது. இதில் இவர்களுடன் சேர்ந்து சுமதி-செல்வகுமார் தம்பதியரும், காளீஸ்வரி-கிருஷ்ணன் தம்பதியரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து 10 சவரன் தங்க நகைகளும், 15000 ரூபாய் ரொக்க பணமும், டூவீலரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தலைவராக முத்தப்பன் இருந்துள்ளார்.
இவர்களது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் மந்தித்தோப்பு ஆகும். தற்போது கோவை பாப்பம்பட்டி பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் பேருந்தில் ஏறி நகை மற்றும் பணம் திருடி வந்துள்ளனர். அதன் பின் இவற்றை விற்று 3 வீடுகள் கட்டியுள்ளதாக தெரிய வந்தது. அதேபோன்று மற்ற இரு தம்பதிகளும் வீடு கட்டி உள்ளனர். மேலும் கேரளா போன்ற மாநிலங்களுக்கும் சென்று நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.