
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோகுல் நகர் பகுதியில் முருகானந்தம் என்பவர் வாழ்ந்து வந்தார். இவரது மகன் கண்ணன் கியாஸ் சிலிண்டர் டெலிவரி வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீல்புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கண்ணன் கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த ஜெபராஜ்(58) என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது கண்ணனின் லோடு ஆட்டோ உரசியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதால் கைகலப்பாக மாறி ஜெபராஜ் கண்ணனை தாக்கியுள்ளார்.
பின்பு பேச்சு வார்த்தைக்காக சென்ற கண்ணன் சில ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். ஆனால் அங்கு மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஜெபராஜ் தாக்கப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜெபராஜை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் ஜெபராஜ் மகன் நவீன் மருத்துவமனைக்கு சென்றபோது கண்ணன் மருத்துவமனையின் அருகே நின்று கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்த நவீன் தன்னுடைய ஆதரவாளர்கள் சிலரை அழைத்துச் சென்று கண்ணனிடம் தகராறு செய்தார். இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். சண்டையில் கந்தவேல்(21), நட்டார் ஆனந்த்(20), ஆண்ட்ரூஸ் நவீன்(32) மற்றும் விஜய் பிரகாஷ்(27)ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.