கரூர் மாவட்டம் வாங்கலில் காவிரி ஆற்று பரிசல் துறை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது அந்தப் பகுதியில் வினோத்குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு கடைவீதியில் தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த வடமாநில வாலிபர் மோட்டார் சைக்கிளை திருடி விட்டு சென்றார். இதனால் அதிர்ச்சடைந்த வினோத் குமார் தன்னுடைய நண்பர்களுடன் சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். அதன் பிறகு அந்த வாலிபரை அவர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றனர். இதில் அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய வினோத்குமார், கரண் ராஜ், முத்து, பாலாஜி, கதிர்வேல் ஆகிய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் அதில் இருவரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.