திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் கஸ்பா வில்லியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி தனியார் காற்றாலை நிறுவனம் எங்களது விவசாய நிலத்தை சேதப்படுத்தி பாதை அமைத்தது. இந்த நிலையில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், அவரது மகன் ஞானபிரகாசம் ஆகியோர் உதவியுடன் அந்த நிறுவனத்தின் மீது சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் மூன்று மாத காலமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இரண்டு முறை காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்தேன்.

இந்த நிலையில் உதவி ஆய்வாளர் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததை குறிப்பிட்டு என்னை மிரட்டினார். அது மட்டுமில்லாமல் காற்றாலை எந்திரங்களை கொண்டு செல்லும் லாரியை வழிமறித்து தகராறு செய்ததாக என் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தினர். என்னை காவல் நிலையத்திற்கு வரவழைத்து உதவி ஆய்வாளர் சுதன் கடுமையாக தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் வி.கண்ணன் தமிழக அரசு மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும். அந்த தொகையை உதவி ஆய்வாளரிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்தார்.