
ஆண் பெண் பேதமற்ற சமூகத்தை உருவாக்க அழைப்புவிடுக்கும் புதியதலைமுறையின் சக்தி விருதுகள் விழா இந்த ஆண்டு பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. சக்தி விருதுகள் விழாவில் சக்தியின் சாட்சிகளாய் குன்றென நிமிர்ந்து நிற்கும் ஆறு ஆளுமைகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
துணிவு, திறமை, தலைமை, புலமை, கருணை மற்றும் சாதனை ஆகிய ஆறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ”வேறுபாடு களைய ….வேகநடை போடு.” என்பதைமையக்கருத்தாக 2025 ஆம் ஆண்டு சக்திவிருது விழா கொண்டுள்ளது.
சாதிக்கத்துடிக்கும் மங்கையருக்கு முன்மாதிரியாகத் திகழும் முத்தமிழ்ச்செல்விக்கு, துணிவுக்கான சக்தி விருது வழங்கப்பட்டது. தன்னுடன் எவரஸ்ட்மலை சிகரத்தை தொடமுயன்ற சிலர் உயிரிழந்ததை கண்முன்னே கண்டது உட்பட ஏராளமான சவால்களைத் தாண்டி, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டின் முதல்பெண்மணி முத்தமிழ்செல்வி. அவரது மன உறுதியும், கனவுகளைத் மெய்பிக்க தடைகளை தாண்டும் தைரியமும், விடாமுயற்சி வெற்றி தரும் என்பதை இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டுகின்றன.
பார்வை போனாலும் அகத்தில் ஆயிரம் கண்கள் உண்டு, விழியிழந்தாலும் ஆயிரம்வழிகள் உண்டு என்று பார்வைச் சவாலை தன்னம்பிக்கையால் தகர்த்துக்காட்டியுள்ள பூர்ணசுந்தரி ஐ.ஆர்.எஸ்-க்கு திறமைக்கான சக்திவிருது வழங்கப்பட்டது. பார்வைகுறைபாடு இருந்தபோதிலும், தடைகளைத்
தாண்டி, அனைத்து இடர்களையும் மீறி, பூர்ணசுந்தரி 2019 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சிபெற்றார். தற்போது இந்திய வருவாய் சேவைதுறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். விடாமுயற்சியின் சக்தி மற்றும் மனவலிமைக்கு சான்றாக உள்ளார் பூர்ணசுந்தரி.
இராணுவத்தில் செவிலியராய் பணிபுரிந்து, முதல் தமிழ் மேஜர் ஜெனரலாக உயர்ந்த திருமிகு இக்னேசியஸ் டெலஸ்புளோரா-வுக்கு தலைமைக்கான சக்தி விருது வழங்கப்பட்டது. ராணுவப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த இக்னேஷியஸ் டெலஸ்புளோரா சிறுவயதிலிருந்தே ராணுவத்தில் சேர விரும்பினார். தனது 17வது வயதில் இந்திய ராணுவ செவிலியர் சேவைப்பிரிவில் சேர்ந்து படிப்படியாக உயர்வு பெற்று, செவிலியர் பிரிவில் முதன்மை இடமான மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றவர். தனது தலைமைப்பண்பால் குடியரசு தலைவரிடம் நைட்டிங்கேல் விருது பெற்றவர் இக்னேசியஸ் டெலஸ்புளோரா.
ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக உரத்துக்குரல் கொடுத்துவரும் பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலரான திருமிகு. ஷ்யாமளா நடராஜ்-க்கு கருணைக்கான சக்தி விருதுகள் வழங்கப்பட்டது. தென்னிந்திய எய்ட்ஸ் செயல்திட்டத்தின் (SIAAP) நிறுவனரான ஷியாமளா, HIV/AIDS குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பாடுபட்டவர். HIV/AIDS குறித்து கொள்கை மாற்றங்கள் கொண்டுவர அவர் செய்த புரட்சிகரமான பணியின் காரணமாக, ஷ்யாமளா நடராஜ் 2005 ஆம்ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இன்றும் பின்தங்கிய சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக செயலாற்றி வருகிறார். நான்கு தசாப்தங்களாக சத்தமின்றி சமூகப்பணியாற்றிவரும் திருமிகு. சியாமளாநடராஜ் அவர்களுக்கு கருணைக்கான சக்தி வருது வழங்கப்பட்டது.
ஸ்கிசோஃப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளையின் (SCARF) இணை நிறுவனர், மனநல மருத்துவர் தாரா-வுக்கு புலமைக்கான சக்தி விருது வழங்கப்பட்டது. மனநோய் குறித்த மூடநம்பிக்கைகள் மற்றும் மனநோயாளிகள் குறித்து சமூகத்தில் நிலவும் தவறான கருத்துகளை அகற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாமதமின்றி மருத்துவ உதவி பெறவேண்டும் என்பது உள்பட மனநலன் குறித்த பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1995 (PWD Act) இல் மனநலக்குறைபாட்டைச் சேர்ப்பதில் டாக்டர் தாரா முக்கிய பங்கு வகித்துள்ளார். மனநலக்குறைபாட்டை மதிப்பிடும் ‘ஐடியாஸ்’ கருவி உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர் டாக்டர் தாரா. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்கிசோஃப்ரினியா குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
தேசத்திற்கு தன்னலமற்ற சேவையாற்றிய கேப்டன் லட்சுமிகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தற்போது 98 வயதாகும் லட்சுமிகிருஷ்ணன் நேதாஜியுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இவர் தனது 15வது வயதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றினார். இளம் வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அவரது உத்வேகம், நாட்டிற்காக உயிரையும் அர்ப்பணிக்க முன்வந்த அவரது துணிச்சலும், இன்றைய இளம்தலைமுறையினருக்கு பாடமாக அமைந்துள்ளது.
தேசத்திற்கு தன்னலமற்ற சேவையாற்றிய லட்சுமிகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. புதிய தலைமுறை குழுமத்தின் தலைவர் டாக்டர் சத்தியநாராயணன் அவர்கள் தலைமையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் இந்த வண்ணமிகு விழாவில் பொதுமக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த விழாவின் தொகுப்பு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சர்வதேச மகளிர் நாளான மார்ச் 8 ஆம் நாள் ஒளிபரப்பாக இருக்கிறது.